தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது முதலீட்டு விதிமுறைகளை மாற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிறுவனங்களின் EPFO நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் பங்குச்சந்தை, அரசு பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றது. இதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு விகிதாச்சார வரம்புகள் உள்ளன. தற்போது EPFO 15 சதவீதம் வரையிலான நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது.
இந்நிலையில் முதலீடு செய்வதற்கான வரம்பை 20 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் EPFO அறங்காவலர் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்குச்சந்தை முதலீட்டு வரம்பை 20 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக முன்மொழிதல் வைக்கப்படும். இதற்கு ஒப்புதல் அளித்தால் இனி இந்த திட்டங்களில் ஊழியர்கள் முதலீடு செய்துள்ள மொத்த தொகையில் 20% நிதி பங்கு சந்தை மற்றும் பங்கு சந்தை சார்ந்தவற்றில் முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.