சென்னையில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைபாதையில் தஞ்சமடைந்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் அனைத்தும் கொரோனா பாதிப்பால் முடக்கப்பட்டது. இந்த கட்டுமான பணிகளில் 75 சதவீதத்திற்கும் மேல் வடமாநில தொழிலாளிகளே ஈடுபடுத்தப்படுவர். ஊரடங்கிற்கு பின் பல கட்டுமான நிறுவனங்கள் வேலை இல்லை என்பதால், தொழிலாளர்களை அப்போதே வெளியேற்றி விட்டது. ஒரு சில கட்டுமான நிறுவனங்கள் மட்டும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்கள் பணிபுரிந்த இடத்திலேயே தங்க அனுமதி அளித்ததோடு,
உணவும் சேர்த்து அளித்து உதவி வந்தது. இந்நிலையில் மே 3 வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மீண்டும் மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை அவர்களுக்கு உதவிய நிறுவனங்களாலும் சமாளிக்க முடியாமல் அவர்களை படிப்படியாக வெளியேற்ற தொடங்கினர். இதுகுறித்து சென்னை சென்ட்ரல் நடைபாதையில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளிகளிடம் கேட்டபோது, நாங்கள் பூந்தமல்லி பகுதியில் அடுக்குமாடி கட்டிட குடியிருப்பில் கட்டுமான தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தோம்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின் நாங்கள் பணிபுரிந்த நிறுவனம், எங்களுக்கு உணவும் தங்குமிடமும் அளித்து உதவி செய்து வந்தது. திடீரென ஒரு நாள் சென்னை சென்ட்ரலில் இருந்து உங்கள் சொந்த ஊருக்கு ரயில் செல்வதாக கூறி எங்களை வெளியேற்றினார்கள். நாங்களும் அதனை உண்மை என நம்பி பூந்தமல்லி காட்டுப்பாக்கம் பகுதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை நடந்தே வந்தோம்.
இங்கு வந்த பின்பு தான் தெரிந்தது ரயில்கள் ஏதும் இயக்கப்பட வில்லை, எங்களது நிறுவனம் எங்களை ஏமாற்றி விட்டது என்பது. தற்போதைய சூழ்நிலைக்கு கையில் பணமும் இல்லை, நடக்க தெம்பும் இல்லாததால் சென்னை சென்ட்ரல் நடை பாதையிலேயே தங்கி விட்டோம்.
பசி எடுக்கும் பட்சத்தில் அம்மா உணவகத்தில் உணவு உண்டு பசியைப் போக்கிக் கொள்கிறோம். பெண்களை வைத்துக்கொண்டு நடைபாதையில் தங்குவது தான் மன வேதனை அளிக்கிறது. உழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நாங்கள், இன்று பிச்சைக்காரர்கள் போல் ஆகிவிட்டோம். தமிழக அரசு தான் எங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.