சென்னை சைதாப்பேட்டை வர்த்தகர் சங்க அறக்கட்டளை திருமண மண்டபத்தில் 285 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கர்ப்பிணிகளுக்கு மாலை, சந்தனம், வளையல் அணிவித்து சீர்வரிசை வழங்கினர். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசியஅமைச்சர் மா.சுப்பிரமணியன், தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கர்ப்பிணிகள் கவுரவிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து மிக அவசியம். அவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களின் விவரங்கள் மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டது.
அதில், தமிழகத்தில் 1.11 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 43,000 பேருக்கு இதய கோளாறு, சிறுநீர் கழிக்கும் இடத்தில் பிரச்சினை போன்ற ஏதேனும் ஒரு குறை கண்டறியப்பட்டுள்ளது. அவற்றுக்கு சிகிச்சை வழங்கும் பணிகளை அரசு முன்னெடுத்துள்ளது. இதனையடுத்து சமுதாய வளைகாப்பில் பங்கேற்றுள்ள பெண்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அவ்வாறு தமிழில் பெயர் வைக்கும் குழந்தைகளுக்கு முதல் ஆண்டு கல்வி கட்டணத்தை சைதை கலைஞர் கணினி கல்வி மையம் ஏற்கும் என்று தெரிவித்துள்ளார்.