கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் அரசு அமைத்து வந்த தற்காலிக மருத்துவமனைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீனாவைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தற்போது ஹாங்காங்கிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக அப்பிராந்திய அரசு அவசர நிலைப் பிரகடனம் செய்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நோக்கில் காலி அரசு ஹவுஸிங் கட்டடம் ஒன்றைத் தற்காலிக மருத்துவமனையாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருந்தது.
இதனிடையே, இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அடையாளம் தெரியாத சில நபர்களை அந்த கட்டடத்துக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதையடுத்து, தற்காலிக மருத்துவமனை அமைக்கும் முயற்சியைக் கைவிடுவதாக அரசு அறிவித்துள்ளது.
தற்போது, கொரோனா வைரஸ் நோயாளிகளைக் குணப்படுத்த ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பொழுதுபோக்குப் பூங்கா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இதுவரை ஆறு பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.