தனியார் பேருந்து மோதி பா.ம.க நிர்வாகி உயிரிழந்ததால் பொதுமக்கள் பேருந்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள ஆவடியை சேர்ந்த தம்பதியினர் கார்த்திகேயன்-சத்யபிரியா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திகேயன் பாமக கட்சியின் நிர்வாகியாக பதவி வகித்தார் .இதற்கு முன்பாக ஊராட்சிமன்றத் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் . நேற்று மாலை கார்த்திகேயன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த தனியார் நிறுவனப் பேருந்து ஒன்று இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கார்த்திகேயன் பலத்த காயம் அடைந்தார். விபத்து ஏற்படுத்திய பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய கார்த்திகேயனை அப்பகுதி மக்கள் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . ஆனால் அங்கு கார்த்திகேயனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்து நடந்த பகுதிக்கு ஒன்று திரண்டு வந்தனர் .விபத்திற்கு காரணமான தனியார் நிறுவன பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதோடு பேருந்தை தீவைத்து எரித்துள்ளனர். இதில் பேருந்து முழுமையாக தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் எரிந்த தீயை அணைத்துள்ளனர்.
இருப்பினும் பேருந்து முற்றிலும் எரிந்தது. காவல் மாவட்ட துணை கமிஷனர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார் . மேலும் அப்பகுதியில் பிரச்சனை எதுவும் நடக்காமல் இருப்பதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர் . இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.