பெர்செவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் இருக்கும் பழைய பாறைகளை கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஜெசெரோ என்னும் பள்ளத்தை ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா என்ற அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம், ஒரு வாகனத்தின் அளவுடைய பெர்செவரன்ஸ், ரோவரை தயாரித்தது. இந்த விண்கலம், கடந்த வருடம் ஜூலை மாதம் 30ஆம் தேதியன்று செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அன்று, வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர், செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆராய்ந்து புகைப்படங்களை பூமிக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் பழைய பாறைகளை கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறது.
இந்த பாறைகள் எரிமலை வடிவத்தில் உள்ளது. எனவே, எரிமலை குழம்பினால் அவை உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இன்னும் பத்து வருடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைகளின் மாதிரிகளை, பூமிக்கு கொண்டு வந்தால், அவை எப்போது உருவாகியிருக்கிறது? என்பதை கண்டறிந்து விடலாம். இது, செவ்வாய் கிரகம் மற்றும் அதனைத் தாண்டி இருக்கும் பரந்த அளவில் சூரிய குடும்ப வரலாறு தொடர்பில் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கிறது.