புதுச்சேரியில் வரும் 8ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அதேபோல வரும் 8ம் தேதி முதல் உணவகங்கள் திறக்கப்பட்டு 50% பேர் உணவருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும், 5ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது ஏற்கனவே வழங்கப்பட்ட தளர்வுகள் இல்லாமல் மேலும் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில் முக்கியமான ஒன்று புனித தலங்களை மக்கள் தரிசனத்திற்கு திறப்பது. எனினும், இந்த தளர்வுக்கு தமிழக அரசு தடையை நீட்டித்துள்ளது. அதேபோல உணவகங்கள் சில நிபந்தனைகளுடன் செய்லபட அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில், புதுச்சேரியில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதுவரை 104 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், நேற்று வரை 63 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று 6 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர்.
மேலும், கோரிமேடு போலீஸ் குடியிருப்பு, சோலைநகர், பாகூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து தற்போது 62 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் இதுவரை 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.