புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை திறப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதுமடம் கிராமத்தில் பழமையான கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி கொண்டு வருகிறது. இங்குள்ள புதுமடம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். அங்கு உள்ள மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவசர காலங்களில் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர்.
மேலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாமல் இயங்குகிறது. இந்நிலையில் கடந்த நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மருத்துவமனையைச் சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்ததோடு, அங்குள்ள உள்நோயாளிகள் வார்டு, வெளி நோயாளிகளை பரிசோதிக்கும் வார்டு, பிரசவ வார்டு என அனைத்து அறைகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகில் தேசிய சுகாதார திட்டம் மற்றும் சிறப்பு நிதிகள் மூலம் புதிய சுகாதார நிலையம் கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் இருப்பதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். எனவே அந்த புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கூடிய விரைவில் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.