செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருவதால் அதை சரி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மணமை கிராமத்தில் ஊராட்சி பொது குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணறு இதுவரை மூடப்படாமல் திறந்த வெளியாக இருப்பதால் அதில் பறவைகள் மற்றும் பூச்சிகள் அடிக்கடி விழுந்து இறந்து கிடக்கின்றது. மேலும் மரங்களிலிருந்து இலைகள் எல்லாம் விழுந்து கழிவு நீர் போல் காட்சியளிக்கிறது.
இந்த கிணற்றிலிருந்து வினியோகிக்கப்படும் தண்ணீரை பொதுமக்கள் குடிப்பதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் கிணற்று நீரை வெளியேற்றி பூச்சிகள் எதுவும் உள்ளே விழாதவாறு கிணற்று மீது மூடி அமைத்து பாதுகாக்க வேண்டுமென்றும் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வராமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.