புதுக்கோட்டை மாவட்டத்தில் கடல் பகுதியில் அடிக்கடி கடல் உள் வாங்குவதால் மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் நிவாரணம் வழங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம், மணல்மேல்குடி உள்ளிட்ட கற்றுவட்டார பகுதிகள் கடற்கரை கிராமங்கள் ஆகும். அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழில் மற்றும் கடலில் பாசி வளர்ப்பு தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் கடல் பகுதியில் குறிப்பிட்ட அளவிற்கு கயிறு கட்டி அதில் பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாசிகள் 90 நாட்கள் வளர்க்கப்பட்டு பிறகு அறுவடை செய்து மதுரை, தூத்துக்குடி, கர்நாடகா உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த பாசி உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது. இந்நிலையில் கடல் அடிக்கடி உள் வாங்கி சில மணி நேரத்துக்குப் பிறகு அல்லது ஒரு நாளுக்குப் பிறகே சமநிலைக்கு வருகிறது. இதனால் பாசிகள் காய்ந்து அதன் பின் கடல் சகஜ நிலைக்கு வந்த பிறகு பாசிகள் அழுகி விடுவதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.