வடகொரியாவில் அடுத்த 11 நாள்கள் மக்கள் சிரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1948-ஆம் ஆண்டில் வடகொரிய நாட்டை நிறுவி ஆட்சி செய்து வந்த கிம் இல் சங் என்பவர் 1994-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பிறகு அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபராக ஆட்சி செய்து வந்தார். இவர் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் வடகொரியாவை ஆட்சி செய்துள்ளார். பின்னர் கடந்த 2011-ஆம் ஆண்டில் கிம் ஜோங் இல் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராக பதவியேற்று வடகொரியாவில் மூன்றாவது தலைமுறையாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
மேலும் கிம் ஜோங் உன் ஆட்சிக்காலத்தில் பல அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வடகொரியாவுக்கும் உலகின் பல நாடுகளுக்கும் பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் வடகொரியாவில் இருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2011-ஆம் ஆண்டில் இதே நாளில் அதிபர் கிம் ஜாங் உன்-இன் தந்தை கிம் ஜோங் இல் இயற்கை எய்தியுள்ளார்.
எனவே அடுத்த 11 நாட்களுக்கு வடகொரிய நாட்டு மக்கள் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாட கூடாது, மது அருந்தக் கூடாது, சிரிக்கக் கூடாது என அந்நாட்டு அரசு பயங்கர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் இதற்கு முன்பு குடித்துவிட்டு போதையில் துக்க காலத்தில் பிடிபட்ட பலர் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இதுவரை திரும்பி வந்ததாக சரித்திரம் இல்லை என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கிம் ஜோங் இல் இறந்த தினமானது பத்து நாள்களுக்கு துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கிம் ஜோங் இல் 10-ஆவது நினைவு ஆண்டு என்பதால் தூக்கம் 11 நாட்கள் கடைபிடிக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இந்த துக்கம் அனுசரிப்பின் போது தங்கள் பகுதிகளில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.