பாகிஸ்தானில் கொரோனா வைரசால் முதல் நபர் மரணமடைந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் பாகிஸ்தான் நாட்டிலும் வேகமாக பரவ தொடங்கி விட்டது. அந்நாட்டில் இதுவரை 193 பேருக்கு வைரஸ் பரவியிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே மஸ்கட் (Muscat) நாட்டில் இருந்து கடந்த 15 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாகூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் கொரோனா தாக்குதலுக்கு பாகிஸ்தானில் முதல் நபர் மரணமடைந்ததால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.