பெண்ணிடம் 5 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் வதனராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லையில் உள்ள பயிற்சி மையத்தில் அரசு தேர்வில் பங்கேற்பதற்காக படித்து வருகிறார். இந்நிலையில் உமாமகேஸ்வரி பயிற்சி மையத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் உமா மகேஸ்வரியிடம் முகவரி கேட்பது போல அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகையை பறித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து உமா மகேஸ்வரி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.