உல்லாசமாக இருப்பதற்கு பெண்ணை அழைத்த போது மறுப்பு தெரிவித்ததால் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவகுரு சமத்துவபுரம் அருகாமையில் புதியதாக மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. இந்த பணியில் பல வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் பீகார் மாநிலத்தில் வசிக்கும் பிரிதிவ்பிரானு மற்றும் அவரின் மனைவி மூர்த்திதேவி அங்கு தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இதனை போல் ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் கேஷப்நாயக் என்பவரும் கூலி வேலை செய்து வந்துள்ளார். அப்போது அருகில் இருந்த ஆற்றில் மூர்த்திதேவி துணி துவைத்து கொண்டிருக்கும் போது கேஷப்நாயக் அவரிடம் தகாத முறையில் பேசி உல்லாச உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
அதற்கு மறுப்பு தெரிவித்த மூர்த்திதேவியை கட்டாயப்படுத்தும் போது அவரின் சத்தம் கேட்டு கணவர் பிரிதிவ்பிரானு அங்கு வந்துள்ளார். அப்போது இரண்டு நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் கேஷப்நாயக் பிரிதிவ்பிரானுவின் கையில் கத்தியால் குத்தியுள்ளார். அதன்பின் அவரின் மனைவியை அருகிலிருந்த கழிவறைக்கு இழுத்து சென்று உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு அவரின் வயிற்றில் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் இதனை அறிந்த சக தொழிலாளர்கள் அங்கு வருவதை அறிந்த கேஷப்நாயக் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் பிரிதிவ்பிரானுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து மூர்த்திதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்து விட்டு தப்பி சென்ற கேஷப்நாயக் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.