ஆம்பூரில் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டித்தோப்பு பகுதியில் சுரேஷ்- ஜெயலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலட்சுமி கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி குடும்ப செலவிற்காக அதே பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதனையடுத்து ஜெயலட்சுமியிடம் கடன் பெற்ற பத்து நாட்களில் அந்த பணத்தை திருப்பித் தரும்படி பிரேமா வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதன்பின் வீட்டில் இருந்த குழந்தைகளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று ஜெயலட்சுமியை காப்பாற்றினர்.
இதுகுறித்து ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகின்றது. இதனால் காவல் நிலையம் முன்பு ஜெயலட்சுமி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் ஜெயலட்சுமியை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் மற்றும் டவுன் இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன்பின் விரைவில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலட்சுமியிடம் காவல்துறையினர் உறுதியளித்ததால் அவர் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளார்.