இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறுகியகால பணியில் மட்டுமே ஈடுபட்டு இருந்தனர். இதனால் தங்களுக்கு நிரந்தரபணி வேண்டும் என அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து இவர்களுக்கு நிரந்தரபணி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது தகுதியிருந்தும் பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைப்பதில்லை என 34 பெண் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர்.
அதில், இராணுவத்தில் ஆண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுக்கான தேர்வுக் குழுவானது அமைக்கப்பட்டு உள்ளது. எனினும் பெண்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வுக் குழு அமைக்கவில்லை என கூறியுள்ளனர். அத்துடன் ஆண் அதிகாரிகள் தங்களைவிட ஜூனியர்களாக இருப்பினும் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், ராணுவ பதவி உயர்வில் பாலின பாகுபாடு காட்டக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
இந்த 34 பெண் அதிகாரிகளின் பதவிஉயர்வு பற்றி மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெண் அதிகாரிகளுக்கு ஏன் தேர்வுக்குழு அமைக்ககூடாது என கேள்வி எழுப்பியுள்ளது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு பெண் அதிகாரிகளுக்கான சிறப்பு தேர்வுக் குழு ஒன்றை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்குழு ஜனவரி மாதத்தில் இருந்து செயல்படும் எனவும் முடிவுசெய்துள்ளது. இதன் வாயிலாக பெண் ராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.