துப்பாக்கியால் 3 மயில்களை சுட்டு வேட்டையாடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள சோழபாண்டி கிராமத்தில் நேற்று அதிகாலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்துள்ளனர். அவர்களைப் பிடித்து விசாரிக்கும் போது அவர்களிடம் 3 மயில்கள் இறந்த நிலையில் இருந்தததை கண்ட காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
இந்த விசாரணையில் அவர்கள் திருமேனி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த முருகேசன், இளங்குமரன் என்பதும் அப்பகுதியில் வயலில் நின்று கொண்டிருந்த மயிலை அவர்கள் துப்பாக்கியை கொண்டு சுட்டு வேட்டையாடியதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை மன்னார்குடி வனசரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் வனசரக அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள், துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.