பட்டா வழங்கக் கோரி மக்கள் நல சேவா சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் நல சேவா சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில், நிர்வாகிகள் சுரேஷ், பாபு, சின்னத்துரை, பிரதாபன் போன்றோர் முன்னிலையில் நடைபெற்றது. இதனையடுத்து செயலாளர் ராஜா வரவேற்றுப் பேசினார். அதன்பின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவ்வை மதியழகன், மக்கள் நல சேவா சங்க துணைத்தலைவர் முனிரத்தினம் போன்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளனர்.
இதனைதொடர்ந்து பேரணாம்பட்டு வருவாய்க் கிராம கணக்கில் இலவச கைப்பற்று இனாம் நிலம் என்பதை நீக்கி சுமார் 5 ஆயிரம் வீடுகளுக்கு நத்தம் பட்டம் வழங்க வேண்டும் என்றும் தரைக்காடு பகுதியில் டி.சி நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். மேலும் பேரணாம்பட்டு ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து கால்வாய் மற்றும் ஏரி மதகு கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.