இந்தியர்களுக்கு டோக்கியோவில் இந்திய தூதரகம் தேவையான உதவிகளை அளித்து வருகிறது என ஸ்டாலினுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
சீனாவில் ‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை 1367 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இதனிடையே சீனாவில் இருந்து ஜப்பான் வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அந்நாட்டின் யோகோஹாமா துறைமுகத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 6 தமிழர்கள், 100 இந்தியர்கள் உட்பட 3700 பயணிகள் உள்ளனர். இதில் 174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில், நேற்று மாலை 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் அனுப்பியிருந்தார். அதில், “6 தமிழர்கள் உட்பட 100 இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வர வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், “ஜப்பானின் யோகோகாமா பகுதியில் நிறுத்தப்பட்ட கப்பலிலுள்ள இந்தியர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது. இந்தியர்களுக்கு டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் தேவையான உதவிகளை அளித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கப்பலிலுள்ள பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு அவர் தெரிவித்துள்ளார்
Our Embassy @IndianEmbTokyo is in constant touch with the crew & passengers of #DiamondPrincess off Yokohama, Japan, rendering all necessary support & assistance.
Passengers & crew are currently quarantined by Japanese authorities. @mkstalin— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 13, 2020