மும்பையில் தெருவிளக்கில் படித்து போட்டித் தேர்வில் வெற்றி பெற்று 17 வயதான பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
வெற்றிக்கு காசு பணம் தேவையில்லை நல்ல திறமை இருந்தால் போதும் என்பதற்கு சிறந்த உதாரணம் தரும் வகையில், மும்பையில் அதிசயம் ஒன்றை பெண்மணி ஒருவர் நிகழ்த்தியுள்ளார். மும்பை துறைமுகம் அருகே உள்ள மைதானத்தில் நடைபாதையில் 17 வயதான ஆத்மா என்ற பெண் தந்தை மற்றும் சகோதரர்களுடன் வசித்து வருகிறார்.
அவர் மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று தற்போது சாதனை படைத்துள்ளார். பகலில் போக்குவரத்து சத்தம் அதிகமாக இருப்பதால், இரவில் தெருவிளக்கில் மட்டுமே படித்து தேர்ச்சி பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த விடாமுயற்சி மற்றும் படிப்பின் மீது அவர் கொண்ட நாட்டத்தினால் கிடைத்த வெற்றிக்கு பொதுமக்கள் தொடர்ந்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கல்வியின் அவசியத்தை உணர்ந்து நன்கு படித்து போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அவரது பெற்றோர்களுக்கு அவர் பெருமை சேர்த்தது மட்டுமல்லாமல், அவரைப்போன்று ஏழை மாணவர்களும் கட்டாயம் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி, பிற மாணவர்களுக்கும் ஊக்கம் அளித்துள்ளார்.