கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் மோடி சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து விட்டதாக கூறப்படும் புகழாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு பல நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
குறிப்பாக பாஜகவின் தலைவர் ஜேபி நட்டா பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்துள்ளார். மோடி போன்ற சக்தி வாய்ந்த தலைவர் இல்லை எனில் இந்தியாவால் இக்கட்டான இந்த சூழ்நிலையை சமாளித்திருக்க முடியாது என்று தெரிவித்தார்.
தற்போது இவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான பா சிதம்பரம் எதிர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில், சரியான முடிவுகளை எடுத்துவிட்டோம் என பெருமைப்பட்டுக் கொள்ளும் பிரதமர் அவர்களே, பலகோடி குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டும், ஊரடங்கு விதிகளை தளர்த்திய பிறகும் வேலை இழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலை இல்லாமல் நிற்கிறார்களே இதுதான் சரியான முடிவுக்கான பயனா? என கேள்வி எழுப்பியுள்ளார்.