தஞ்சை ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து நடிகர் பார்த்திபன் மரியாதை செலுத்தினார்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தை தஞ்சாவூரில் உள்ள ஜிவி திரையரங்கில் பார்ப்பதற்காக நடிகர் பார்த்திபன் நேற்று காலை 8 மணிக்கு வந்து ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து மகிழ்ந்தார். இதை அடுத்து அங்கிருந்து தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருக்கும் ராஜராஜ சோழன் சிலைக்கு வந்தார்.
அவருக்கு கரகாட்டம் மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதன்பின் அவர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் சோழர்களின் கொடியான புலி கொடியை கையில் ஏந்தினார். இந்நிகழ்வில் தஞ்சை மாநகராட்சி மேயர், துணைமேயர், ஊராட்சி மன்ற தலைவர், நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் என பலர் கலந்து கொண்டார்கள். இதன்பின் பார்த்திபன் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது பொதுமக்கள் அவருடன் நின்று செல்பி எடுத்துக்கொண்டார்கள்.