திருவனந்தபுரத்தில் ஒரு ஹோட்டலில் புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சமீபத்தில் மாணவி ஒருவர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா வாங்கி வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பார்சலில் பாம்பு தோல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் அப்பகுதியை சேர்ந்த காவல்துறை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அவர்கள் விரைந்து சென்று பார்சலை கைப்பற்றி ஆய்வு நடத்தினர். பின்பு ஹோட்டலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் இந்த ஹோட்டலில் உணவுப் பொருட்களை வினியோகம் செய்வதில் அலட்சியமாக இருந்ததாகவும், அம்சங்களை முறையாக கடைப்பிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டி சீல் வைத்தனர். இதற்கிடையில் பொதுமக்கள் சிலர் புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருப்பதை புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.