ஜப்பான் தலைநகரில் நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்ற சீன நாட்டின் வீராங்கனைக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற மகளிர் 49 கிலோ பளுதூக்கும் போட்டியில் சீனாவைச் சேர்ந்த ஹு ஜிஹூய் என்பவர் மொத்தமாக 219 கிலோவை தூக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து இந்த பளுதூக்கும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மீராபாய் சானு சைகோம் என்பவர் மொத்தமாக 202 கிலோவை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்நிலையில் மகளிர் 49 கிலோ பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து பரிசோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு செய்யப்படும் பரிசோதனையில் சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து கொடுக்கப்பட்டது உறுதியானால் அவருக்கு கொடுக்கப்பட்ட தங்கப்பதக்கம் ஹு விடமிருந்து பறிக்கப்படும். இதனையடுத்து பளுதூக்கும் போட்டியில் 2 ஆவது இடத்தைப் பிடித்த இந்திய நாட்டின் மீராபாய்க்கு அந்த தங்கப் பதக்கம் கொடுக்கப்படுவதற்கு வாய்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.