திருவாரூர் மாவட்டத்தில் பெற்றோர்கள் கண்டித்ததால் ஒரே நேரத்தில் 3 நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்துள்ள கப்பலுடையான் பகுதியில் ஆனந்த்(26), ஆசைத்தம்பி(28), அசோக்குமார்(26) ஆகிய 3 பேர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அசோக்குமார் மற்றும் ஆனந்த் ஊருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து கமுகக்குடியை சேர்ந்தவர்கள் நேற்றுமுன்தினம் கப்பலுடையான் பகுதிக்கு வந்து மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர்.
இதனை பார்த்த ஆனந்த், அசோக்குமார், ஆசைத்தம்பி ஆகிய 3 பேரும் இங்கு வைத்து மது அருந்தக்கூடாது என கூறி தகராறில் ஈடுபட்டு அவர்களின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து கமுககுடியை சேர்ந்த அவர்கள் கப்பலுடையான் கிராமத்தினரிடம் முறையிட்டு இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய 3 இளைஞர்களிடம் இருந்து இழப்பீடு தொகை வாங்கி அவர்களிடம் வழங்கியுள்ளனர். மேலும் அசோக்குமார் மற்றும் அவரது 2 நண்பர்களையும் அவர்களது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் நண்பர்கள் 3 பேரும் மிகவும் மனவருத்தத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் மனமுடைந்த 3 பேரும் ஒரே நேரத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் மயக்கமடைந்து கிடந்ததை பார்த்த அவர்களது உறவினர்கள் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று பலனின்றி ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து ஆசைத்தம்பி மற்றும் அசோக்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நீடாமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.