ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறித்து போல் உள்ள காட்சிகள் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் எனது மகள் கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த ஆறாம் தேதி முதல் எனது மகளை காணவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது எனது மகள், அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, ஃப்ரீ ஃபயர் கேம் விளையாட்டு விளையாடியதாகவும், அதில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக கன்னியாகுமரியை சேர்ந்த ஜாப்ரின் என்பவரோடு சேர்ந்து சென்று இருக்கலாம் என தெரிவித்தனர்.
வளர் இளம் பருவத்தில் உள்ள எனது மகளை, ஆசை வார்த்தை கூறி ஜாப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆகவே எனது மகளை மீட்டு, ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணை வந்தது. அப்போது நீதிபதிகள், கொரோனா ஊரடங்கு காலகட்டம் என்பது இளைய தலைமுறையினருக்கு சோதனை காலகட்டமாக அமைந்தது. ஆன்லைன் வகுப்பு நடைபெற்ற போது இளைய தலைமுறையினர் பலர் மொபைல் மோகத்தில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியுள்ளனர்.இளம் பருவத்தினர் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி தனி உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர். நிஜ வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றனர்.
தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும், மீண்டும் வேறு வேறு பெயர்களில் இணையதளத்தில் அந்த விளையாட்டுகள் வந்து கொண்டேதான் இருக்கிறது. இதனை முழுவதுமாக தடை செய்வதென்பது இயலாத காரியமாகவே உள்ளது.
தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகள் அனைவரும் மொபைலில் மூழ்கி, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதே இல்லை. ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போன்று உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தற்பொழுது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் அவர்களே அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,
இந்த வழக்கில் காணாமல் போன பெண் பெற்றோரிடம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதால் பெற்றோர்கள் தனது மகனை அழைத்துச் செல்லலாம். பெண்ணை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வாலிபர், மீண்டும் பெண்ணிற்கு எந்தவிதமான இடையூறும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவுகளை விட வேண்டும் என வழக்கினை முடித்து வைத்து இருக்கிறார்கள்.