கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்கள் மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி தட்டுப்பாடு போன்ற காரணங்கள் பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் பலி எண்ணிக்கை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது.
இதன் காரணமாக பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அந்தந்த மாநில அரசு நிதி உதவியை வழங்கி வருகின்றது. அதேபோல் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.