கரூரில் கொரோனா பாதிப்பு உள்ளது தெரியாமல் 108 ஆம்புலன்சில் பணிபுரிந்த மருத்துவ உதவியாளர் மன்னிப்பு கேட்டு வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன்னால் யாருக்கு கொரோனா பரவியிருக்கக்கூடாது என்று இறைவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை மன்னித்து விடும் படி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் நேற்று முன்தினம் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்தது.
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 42 பேர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்க கரூர் வந்துள்ளார். மேலும், பணி நிமித்தமாக கரூர் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த ஊழியர், அவருக்கு பணி வழங்கிய மேலாளர் 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக மன்னிப்பு கேட்டு அந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் நான் பாதிக்கப்பட்டாலும் எங்கள் ஊரில் வேறு யாருக்கும் இந்த வைரஸ் தொற்று பாதித்து விடக்கூடாது என்று கூறியுள்ளார். இந்த பதிவு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.