தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 5 சிறுவர்கள் 30 கிலோமீட்டர் வரை வெயிலில் நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் நெட்டிசன்கள் மற்றும் குடிமகன்களிடையே குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மால்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாநில அரசுகளும், அதற்கு தடை விதித்திருக்கும் பட்சத்தில், அதிகளவில் கூடும் இடமான மதுபான கடைகளுக்கு தடை விதிக்காமல் மே 7-ஆம் தேதி முதல் அதனை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் மதுக் கடைகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆகாஷ், விஸ்டாரியா, சபரி, ஆதர்ஷ், சுப்ரியா ஆகியோர் சென்னை படூர் முதல் முதல்வர் இல்லம் வரை சுமார் 30 கிலோமீட்டர் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் இவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
தங்களது கழுத்துகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகள் மாற்றிக்கொண்டு இவர்கள் நடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் குடிமகன்கள் குழந்தைகளுக்கு இருக்கும் விழிப்புணர்வு நமக்கு இல்லையே என்ற குற்றம் மனசாட்சியுடன் டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென்ற கருத்துக்களை தெரிவிப்பதுடன், சிறுவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.