பக்தர்கள் கூட்டத்தால் எப்பொழுதும் திருவிழா கோலமாக காட்சி தரும் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் திருக்கோயில் குறித்த சிறிய செய்தி தொகுப்பு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கிறது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில். தமிழக மற்றும் கர்நாடக பகுதிகளை இணைக்கும் இடத்தில் உள்ள இந்த கோவிலுக்கு மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த குவிந்த வண்ணம் உள்ளனர். வனப்பகுதியில் உள்ள இந்த கோவில் உருவான விதம் பற்றி ஆள கதை ஒன்று உள்ளது. அதில்,
வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று தன்னுடைய பாலை ஒரு இடத்தில் நின்றபடி கொட்டியுள்ளது. இதனை பார்த்த கிராம மக்கள் அந்த இடத்தை தோண்டியபோது அங்கு பண்ணாரி அம்மன் சிலை இருந்துள்ளது. இதையடுத்து அந்த இடத்தில் கூரை அமைத்து மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில் பிரசித்தி பெற்றது பூக்குழி இறங்கும் நிகழ்வு. தொடர்ந்து 12 மணிநேரம் பூக்குழி இறங்கும் ஒரே கோவிலாக பண்ணாரி மாரியம்மன் கோவில் திகழ்கிறது.
சரும நோய்கள் உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனை வேண்டிக் கொண்டு பூக்குழியில் உப்பு மிளகு வாங்கிப் போட்டு வணங்கி விட்டு செல்கின்றனர். இதனால் நோய் நொடிகள் நீங்கி நன்மை பயக்கும் என நம்பிக்கை நிலவி வருகிறது. திருமண பாக்கியம் குழந்தைப்பேறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் வருவோர் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்வதாக கூறப்படுகிறது. மேலும் கேட்டதெல்லாம் தரும் வல்லமை வாய்ந்த அம்மனாக நம்பிக்கை வைத்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.