கூப்பனில் பரிசு விழுந்ததாக கூறி பண மோசடி செய்த 2 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கணேசா நகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசு கூப்பன் என்று கூறி ஒரு சீட்டை அடையாளம் தெரியாத நபர் மீனாட்சியிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கூப்பனில் மிக்ஸி, சமையல் கேஸ் அடுப்பு போன்ற பரிசுப்பொருட்கள் விழுந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து மீனாட்சி அந்த பொருள்களை 4500 ரூபாய் கொடுத்து பெற்றுக் கொண்டார். அதன்பிறகு மீண்டும் அந்த முகம் தெரியாத நபர் மீனாட்சியிடம் உங்களுக்கு எல்.இ.டி. டி.வி, 52 கிராம் தங்க காசு, ஸ்கூட்டர் போன்ற பரிசு பொருள்கள் விழுந்ததாக செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதனை வாங்குவதற்கு வங்கி கணக்கில் 18 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி அந்த நபர் கூறியதால் மீனாட்சியும் நம்பி இரண்டு நாள் கழித்து களக்காட்டில் உள்ள செல்லம்மாள் என்பவரின் கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார். அதன்பின் பணம் அனுப்பியும் பொருள்கள் தராததால் சந்தேகமடைந்த மீனாட்சி அந்த நபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்த முகம் தெரியாத நபர் பொருள்கள் தரமுடியாது என்று கூறியதோடு மீண்டும் தனக்கு பணம் அனுப்பும் படி மீனாட்சியை செல்போனில் மிரட்டியுள்ளார். இது குறித்து மீனாட்சி விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் சைபர் கிரைம் உதவியுடன் மீனாட்சியிடம் பேசிய முகம் தெரியாத நபர்களின் விவரங்களை தெரிந்துகொண்டு விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் முகம் தெரியாத நபர்கள் சங்கரன்கோவில் பகுதியில் வசிக்கும் இசக்கிமுத்து மற்றும் இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் கருப்பசாமி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இசக்கிமுத்து, கருப்பசாமி ஆகிய இருவர் மீதும் கொலைமிரட்டல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.