பழுதடைந்து காணப்படும் குடிநீர் குழாய்களை சரிசெய்து கொடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்திலுள்ள மக்களுக்கு குடிநீர் தொட்டியின் மூலமாக தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக அந்த தொட்டியில் 4 குடிநீர் குழாய்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் 1 குடிநீர் குழாய் மட்டும்தான் தண்ணீர் பிடிக்க பயன்படுகிறது. ஆனால் மீதமுள்ள 3 குழாய்கள் பழுதாகி இருக்கிறது.
மேலும் அந்த குடிநீர் தொட்டியை சுற்றி செடிகள் முளைத்து இருப்பதோடு, மழைநீரும் தேங்கி காணப்படுகிறது. இதன் காரணமாக குடிநீர் பிடிக்க செல்லும் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் தொட்டியை சுற்றி உள்ள செடி மற்றும் மழை நீரை அகற்றுவதுடன், பழுதாகி உள்ள 3 குடிநீர் குழாய்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.