ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏ.செக்காரப்பட்டி சூராங்கோட்டை பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் மாங்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் முத்துராஜ் தனது பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இண்டூர் பேருந்து நிலையம் அருகில் முத்துராஜ் சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் கீழே விழுந்த ஆசிரியர் முத்துராஜ் மீது லாரி ஏறி அவர் உடல் நசுங்கியதால் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து முத்துராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முத்துராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆசிரியர் முத்துராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.