தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஏப்., 14ம் தேதி வரை ஓரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமியும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவ்வப்போது நிலைமை குறித்து ஆட்சியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
இன்று தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் யாரிடமும் உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என்றும், இன்றுடன் ஓய்வுபெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து ஆலோசித்து வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.