சென்னை தலைமை செயலகத்தில் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் – உடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் தொழிலாளர் நலத்துறையின் முதன்மை செயலாளர் நசீம் உதின் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தங்கி வேலை செய்து வருகிறாரகள்.
இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கிய காலம் முதலே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 350 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக புலப்பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த மாநிலத்திற்கு அழைத்து செல்ல வழிவகை செய்ய, ஒவ்வொரு மாநில அரசுகளும் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அந்த குழு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது மாநிலத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில், இது தொடர்பாக ஒடிசா மற்றும் தமிழக முதல்வர்கள் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.