செல்போன் கோபுர வசதி ஏற்படுத்தி தரக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள சித்தேரி மலைப் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருக்கின்றது. இங்கு எஸ். அம்மாபாளையம், சோலூர், மாங்கடை, ததுக்கனஅள்ளி, மண்ணூர் போன்ற மலை கிராமங்களில் செல்போன் கோபுர வசதி இல்லாததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தொடர்பை பெற முடியாத நிலையில் இருக்கின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் கொரோனா கால கட்டங்களில் ஆன்லைன் வகுப்பை பயன்படுத்தி கல்வி கற்க முடியவில்லை. அதன்பின் பிரசவம் மற்றும் விபத்து போன்ற அவசர காலங்களில் உதவிக்கு செல்போன் மூலமாக தொடர்பு கொள்ள இயலவில்லை.
இந்த செல்போன் கோபுர தொடர்புக்கு மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தகவலை தெரிவிக்க வேண்டிய நிலை இருக்கின்றது. இந்நிலையில் சித்தேரி மலைகிராம மக்கள் செல்போன் கோபுர வசதியை ஏற்படுத்த வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மலைகிராம மக்கள் கூறியதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தப் பகுதியில் செயல்பாட்டில் இருந்த தனியார் செல்போன் சேவை முடக்கப்பட்டது.
எனவே வேறு செல்போன் கோபுர வசதி இல்லாததால் நாங்கள் மீண்டும் தகவல் தொடர்பு இல்லாத பழைய கால நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி செல்போன் கோபுரம் ஏற்படுத்தி தரகோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளனர். ஆகவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.