Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvAFG : பரபரப்பு…… பேட்டால் அடிக்க ஓங்கிய ஆசிப் அலி….. களத்தில் சண்டையிட்ட வீரர்கள்…. என்ன நடந்தது?

ஃபரீத் அகமது மற்றும் ஆசிப் அலி இருவரும் களத்தில் சண்டையிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15ஆவது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தது.. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்..

இலங்கை அணி 2 போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. பாகிஸ்தான் அணி 1 போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா இரண்டு போட்டியிலும் தோல்வியுற்று மூன்றாம் இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி ஒரு தோல்வியுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது..

இந்நிலையில் நேற்று இரவு சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஷார்ஜா மைதானத்தில் மோதியது.. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய  ஹ்மானுல்லா குர்பாஸ் 17 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.. அதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இப்ராஹிம் சத்ரான் 35(37) ரன்கள் எடுத்தார். கடைசியில் ரசித் தான் ஒரு 18*(15) ரன்கள் அடிக்க ஆப்கானிஸ்தான்  அணி 20 ஓவர் முடிவில் 129/6 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் ஹரிஸ் ரவூப் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்..

இதையடுத்து 130 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வானும், பாபர் அசாமும் களமிறங்கினர்.. ஃபசல்ஹக் பாரூக்கி வீசிய முதல் ஓவரிலேயே பாபர் அசாம் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து 4ஆவது ஓவரில் பக்கர் ஜமானும் 5 ரன்னில் ரன் அவுட் ஆகி நடையை கட்டினார். அதனைத் தொடர்ந்து 20 ரன்கள் அடித்திருந்த முகமது ரிஸ்வான் 9ஆவது ஓவரில் ரசித் கான் சுழலில் எல்பிடபிள்யு ஆகி ஆட்டம் இழந்தார். அப்போது பாகிஸ்தான் ஸ்கோர் 8.4 ஓவரில் 45/3 ஆக இருந்தது.. பின் இப்திகார் அகமது மற்றும் சதாப்கான் இருவரும் பொறுப்புடன் ஆடி சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

 

இந்நிலையில் 16 வது ஓவரில் இப்திகார் அகமது 30(33) ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து  ரஷீத் கான் வீசிய 17ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ஷதாப் கான் 33 (26) அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் வெற்றிக்கு 3 ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. பின் ஃபசல்ஹக் பாரூக்கி வீசிய 18ஆவது ஓவரின் முதல் பந்தில் முகமது நவாஸ் 4, கடைசி பந்தில் குஷ்த்தில் ஷா 1 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் 109/7 என்று இருந்ததால் ஆட்டம் பரபரப்பானது.. 2 ஓவருக்கு 21 ரன்கள் தேவை..

அதன்பின் ஃபரீத் அகமது வீசிய 2ஆவது பந்தில் ஹரிஸ் ரவூப் 0 ரன்னில் நடையை கட்ட, அதே ஓவரில் 4ஆவது பந்தில் ஆசிப் அலி 16(8) ஒரு சிக்ஸர் அடித்தார். பின்  அடுத்த பந்தில் ஆசிப் அலி சிக்ஸர் அடிக்க முயல அது கரீம் ஜனத்திடம் சென்று கேட்ச் ஆனது.. அப்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் விக்கெட்டை கொண்டாடிய போது, பவுலர் ஃபரீத் அகமது ஆசிப் அலி பக்கத்தில் வந்து கையை உயர்த்தி கத்தினார்.. இதனால் ஆத்திரமடைந்த ஆசிப் அலி அவரை கையால் சற்று தள்ளி விட்டு பேட்டால் ஓங்கினார்.. பின் சக வீரர்கள், அம்பெயர் வந்து சமாதானப்படுத்தினர்.. இதனால் ஆட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது..

இதையடுத்து கைவசம் ஒரு விக்கெட் இருக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான நேரத்தில் பாரூக்கி வீசிய கடைசி ஓவரில் முதல் 2 பந்தையும் புல்டாஸாக வீச இளம்வீரர் நசீம் ஷா தொடர்ச்சியாக 2 சிக்ஸர் அடித்து வெற்றிபெற வைத்து அரங்கை அதிரச்செய்தார்.. இதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா பரிதாபமாக வெளியேறியது. நசீம் ஷா 14(4) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில், பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 9 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்து வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விட்டது. ஃபரீத் அகமது மற்றும் ஆசிப் அலி இருவரும் சண்டையிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |