சீனாவில் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களை பாகிஸ்தான் அரசு மீட்டு வர மறுத்துவிட்டது.
சீனாவில் கொரோனா வைரஸ் :
சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் சுமார் 361 பேரை காவு கொண்டுள்ளது. அங்குள்ள உகான் மாகாணத்தில்தான் இந்த நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. அங்கு இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் பலர் மருத்துவ படிப்பு படிக்கிறார்கள்.
கொரோனா தாக்குதல் காரணமாக அந்த உகான் நகரம் ஒரு தீவுபோல் ஆகி விட்டது. அங்கு வெளியாட்கள் யாரும் செல்வது கிடையாது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன, பஸ் போக்குவரத்து நின்றுவிட்டது. ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.இதனால் அங்கு தங்கி இருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.
இந்திய மாணவர்கள் மீட்பு :
அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தை அனுப்பி 324 மாணவர்களை அழைத்து வந்தது.அதன்பின் நேற்றும் ஏர் இந்தியா விமானம் மூலம் 323 பேரை மீட்டு கொண்டு வந்துள்ளனர்.ஆனால் பாகிஸ்தான் தனது நாட்டு மாணவர்களை மீட்டு கொண்டு வர எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவர்களை மீட்டு வர மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டது.
இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ஆரிப் ஆல்வி கூறியதாவது:-
உகான் நகரில் சிக்கி உள்ளவர்களை மீட்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை நாங்களும் நம்புகிறோம். சீனாவில் வசிக்கும் எங்களது நாட்டினரின் நலனை சார்ந்த முடிவு இது. உலகம் மற்றும் இந்த பிராந்தியத்தின் நலனை கருதியும், சீனாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் உகானில் உள்ள பாகிஸ்தானியர்களை மீட்க போவதில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆத்திரம் :
பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு அங்குள்ள 800 பாகிஸ்தான் மாணவர்களை ஆத்திரம் அடைய செய்துள்ளது. பலர் இந்த அறிவிப்பைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுகிறார்கள். நாடு திரும்பும் இந்திய மாணவர்களை பார்த்து ஏங்கி தவிக்கிறார்கள்.அவர்கள் தங்கள் கோபத்தையும் ஏக்கத்தையும் சமூக வலைதளத்தின் மூலம் வெளியே காட்டி வருகிறார்கள்.ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டும் செல்லும் காட்சியை பாகிஸ்தான் மாணவர்கள் வீடியோவாக பதிவு செய்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் “எங்கள் அரசு எங்களை மீட்கவில்லையே” என்ற வார்த்தையையும் அதில் குறிப்பிட்டு உள்ளனர்.
சில மாணவர்கள், பாகிஸ்தானை கடுமையாக கண்டித்து உள்ளனர். இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு பத்திரமாக அழைத்து செல்லப்படும் காட்சிகளை டுவிட்டரில் பதிவிட்டு, “எங்களையும் அதேபோல் பாகிஸ்தான் அரசு மீட்டு செல்ல வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்ளை கூட அந்த நாட்டு அரசு மீட்டுச் சென்று விட்டது. ஆனால் பாகிஸ்தானியர்கள் மட்டும் இங்கு தவித்து வருகிறோம். எங்களது அரசு, நாங்கள் இறந்தாலும், நோயால் பாதிக்கப்பட்டாலும் எங்களை மீட்க மாட்டோம் என தெரிவித்துள்ளது. இதைச் சொல்ல பாகிஸ்தான் அரசு வெட்கப்பட வேண்டும். பாகிஸ்தான் அரசு, இந்தியர்களை பார்த்து பாடம் படிக்க வேண்டும்” என இன்னொரு மாணவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
முகமது ராவுப் என்ற பாகிஸ்தான் மாணவர் தனது பதிவில், “உகான் பல்கலைக்கழகத்தில், 4 மணி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அடைந்து கிடக்கிறோம். நாங்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எத்தனை நாட்கள்தான் இப்படியே அடைபட்டு கிடப்பது என்பது தெரியவில்லை. நாங்கள் என்ன செய்வோம்? நாங்கள் எங்களின் வாழ் நாளை எண்ணி கொண்டுள்ளோம். அரசு விரைவில் எஙகளை மீட்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மாணவிகள் 3 பேர், “எங்களை மீட்க பாகிஸ்தான் மக்கள் உதவ வேண்டும். இங்குள்ள பிரச்சினை காரணமாக, பாகிஸ்தானில் உள்ள எங்களது குடும்பத்தினர் வேதனையில் உள்ளனர். உகான் நகரம் மூடப்பட்டுள்ளதால், உணவு இல்லாமல் அவதிப்படுகிறோம்” என்று வலை தளத்தில் கண்ணீர் விட்டு அழுதபடி கூறுகிறார்கள்.
ஒரு மாணவர் கூறும்போது, “நாங்கள் பாகிஸ்தான் தூதரகத்தை தொடர்பு கொண்டோம். ஆனால், எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. எங்களை மீட்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது. எங்கள் தாய் நாடே எங்களை மீட்க முன்வராதபோது எங்களை யார்தான் மீட்பார்கள்? மற்ற நாட்டு அரசுகள், தங்கள் நாட்டவரை மீட்டுவிட்டது.” எனக்கூறினார்.
சீனாவுக்கு விசுவாசம் :
பாகிஸ்தான் அறிவித்துள்ளதை பார்க்கும்போது, உலக சுகாதார நிறுவனம் சொல்படி கேட்பதாகவும், சீனாவுக்கு விசுவாசமாக இருப்பதாகவும் தெரிகிறது. அங்குள்ள மாணவர்களை அழைத்து வந்தால் பாகிஸ்தானிலும் கொரோனா பரவிவிடும் என்று அந்த நாடுஅஞ்சுகிறதா? அவர்களை அழைத்து வந்து தனிமை படுத்தி மருத்துவ பரிசோதனை செய்யலாமே? அவர்கள் அங்கு உணவு கிடைக்காமல் அவதி அல்லவா? சொந்த நாட்டு பிள்ளைகளையே பாதுகாக்க விரும்பாத அரசு பக்கத்து நாட்டை ஒரு பொருட்டாக நினைக்குமா? இப்போது அந்த நாட்டு மக்கள் உணருவார்கள்… ஏன் பாகிஸ்தான் பிரிந்தது? ஒன்றுபட்ட இந்தியாவுடன் இருந்திருக்கலாமே… என்று.