ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான் ஒரு விபச்சார வீடு என்று பேசியதை, பாகிஸ்தான் அரசு கடுமையாக எதிர்த்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசை எதிர்த்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எனவே அமெரிக்காவின் தலைமையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில் நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் பேசுகையில், “பாகிஸ்தான் விபச்சார வீடு” என்று பேசியது, பாகிஸ்தானை கொந்தளிக்கச்செய்தது. இது குறித்து அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இவ்வாறு பேசியதால் அவருடன் பாகிஸ்தான் அரசு, இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ளாது.
ஆப்கானிஸ்தான் அரசை கடுமையாக எதிர்க்கிறோம்” என்று கூறியுள்ளார். மேலும் இந்த கருத்து, இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள நம்பிக்கையையும், பரஸ்பர புரிதலையும் குழிதோண்டி புதைத்துவிட்டது என்று பாகிஸ்தான் அரசு கடுமையாக சாடியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான், தலிபான்களுக்கு ஆதரவளித்து, அவர்களை வழி நடத்திச் செல்வதாக மொஹிப் கூறியிருக்கிறார்.
இதற்கு பாகிஸ்தான் தலைவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பாகிஸ்தானில் வாழும் பழங்குடியின மக்களுக்கு அந்நாட்டின் அரசியலில் விருப்பமில்லை, என்றும் தங்கள் உரிமைகளுக்காக அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் மொஹிப் குற்றம் சாட்டியுள்ளார்.