அமெரிக்காவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகம் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், அங்குள்ள பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே கடும் நிதி நெருக்கடி உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டின் தூதரகம் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்குள்ள பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் அந்த தூதரகத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அமெரிக்க பணியாளர்கள் 5 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சம்பளம் கொடுக்கப்படவில்லை. எனவே பணியாளர்களில் ஒருவர் பணியை விட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, கொரோனா பரவலுக்கு பின், வெண்டிலேட்டர்களும் மற்ற மருத்துவ கருவிகளும் வாங்க நிதி மாற்றி விடப்பட்டது.
எனவே, அதனை சமாளிக்க தூதரகம் போராடியது. இதனால் கடைசியாக ஊதியம் வழங்குவது பாதிக்கப்பட்டது. உள்நாட்டு பணியாளர்களுக்கான சம்பளத்தை தக்கவைக்க கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேசமயத்தில் அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதர், இஸ்லாமாபாத்தில் இருக்கும் அதிகாரிகளிடம் இது தொடர்பில் பேசி, கடந்த வாரம் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.