ஒழுக்கத்திற்கு இடையூறு விளைவிப்பவை எனக்கூறி 5 டேட்டிங் செயலிகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது
பாகிஸ்தான் அரசு அந்நாட்டு இளைஞர்கள் இடையே அதிகரித்துவரும் டேட்டிங் பழக்கத்தை எதிர்க்கும் வகையில் டேட்டிங் செயலிகளை கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை மேற்கோள்காட்டி ஒழுக்கத்திற்கு இடையூறு விளைவிப்பவை என குற்றம் சுமத்தி டேட்டிங் தொடர்பான 5 செயலிகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. ஸ்கவுட் (Scout), டின்டேர் (Tinder), க்ரிண்டெர் (Grinder), செ ஹாய் (Say Hi) மற்றும் டக்ட் (Tagged) ஆகிய ஐந்து செயலிகளும் தடை செய்யப்பட்டுள்ளன என்று அந்நாட்டின் தொலைத் தொடர்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
அதோடு அந்த அறிக்கையில் “தடைசெய்யப்பட்ட செயலிகள் தேவையற்ற உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு தவறிவிட்டன. மேலும் சரியான நேரத்தில் அறிவிப்புக்கு பதில் கொடுக்காததால் அதனை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாகிஸ்தானில் ஓரின சேர்க்கை மற்றும் தகாத உறவு சட்ட விரோதமானது ஆகும். ஆனால் இவை இரண்டுமே தடைசெய்யப்பட்ட டேட்டிங் செயலிகளில் அதிகம் ஊக்குவிக்கப்படுகின்றன. இது குறித்து பாகிஸ்தான் அரசு ஐந்து செயலிகளிடமும் கேள்விகளை எழுப்பி இருந்தது. ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்காத நிலையில் செயலிகளை தடை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது” என குறிப்பிடப்பட்டிருந்தது.