வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது .
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 வீரர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்ததாக பஹர் ஜமான் 10 ரன்னில் வெளியேறினார் .இதனால் 35 ரன்னுக்குள் 2 விக்கெட் இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது .இதன்பிறகு 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் – ஹைதர் அலி இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 78 ரன்னும், ஹைதர் அலி 68 ரன்னும் , முகமது நவாஸ் 30 ரன்னும் எடுத்தனர் . இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. இதன் பிறகு 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணி களமிறங்கியது . இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவரில் 137 ரன்னில் சுருண்டது. . இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது . பாகிஸ்தான் அணி சார்பில் முகமது வாசிம் 4 விக்கெட், ஷதப்கான் 3 விக்கெட் கைப்பற்றினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.