ராட்சத அலையால் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேல்மிடாலம் பகுதியில் சர்ஜீன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இணையம்புத்தன்துறை சேர்ந்த தாசன் மகன் ஆன்டனி பிரிட்டன் ராஜா, தேங்காய்ப்பட்டணத்தை சேர்ந்த வினித், முள்ளூர்துறையைச் சேர்ந்த ஷைஜீ, இணையம்புத்தன்துறையை சேர்ந்த மரியதாசன் உட்பட 7 பேர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு மாலை வேளையில் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரம் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது ஒரு ராட்சத அலை எழுந்து படகு மீது மோதியது. இதனால் படகு கவிழ்ந்து 7 பேரும் கடலில் சிக்கி சத்தமிட்டதை கண்டு அவ்வழியாக சென்ற மற்றொரு படகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து கடலில் குதித்து 6 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால் இதில் ஆன்டனி பிரிட்டன் ராஜா ஆபத்தான நிலையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு படகில் ஏற்றி கரைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் கரையை வந்து சேருவதற்குள் ஆன்டனி பிரிட்டன் ராஜா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் முகத்துவாரத்தில் படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றது. இதனால் ஏராளமான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆகவே முகத்துவார வடிவமைப்பை பாதுகாப்பான முறையில் மாற்றி அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.