பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் புதிய திட்டத்தை தொடங்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் புதிய திட்டத்தை தொடங்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு 4 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிக மோசமான கடுமையான பாலியல் தாக்குதலுக்கு ஆள் ஆனவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறையால் வாழ்க்கையை இறந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறையால் ஒருவேளை கர்ப்பம் அடைந்திருந்தால் 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்காக முதற்கட்டமாக 2 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.