பால் கொள்முதல் விலையை உயர்த்துமாறு உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள குடுகாட்டில் பால் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொள்முதல் நிலையம் முன்பாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அனைவரும் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பசும்பால் ஒரு லிட்டர் 32 ரூபாய்க்கு மற்றும் எருமை பால் லிட்டர் 42 ரூபாய்க்கு கொள்முதல் நடக்கின்றன என அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் தீவனத்தின் செலவு அதிகரித்து வருவதால் இந்த விலை போதுமானதாக இல்லை எனவும், கொள்முதல் விலை குறைவால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
இதில் பசும்பால் லிட்டர் 42 ரூபாய்க்கும் மற்றும் எருமைப்பால் லிட்டர் 52 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய வேண்டும். அதன்பின் மாவட்டத்தில் இருக்கும் பால் குளிரூட்டும் மையங்களை தரம் உயர்த்தி சத்தியவாடி மற்றும் வெண்கரும்பூர் ஆகிய பகுதிகளில் இந்த மையங்களை அமைத்து தருமாறு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து தேசிய கூட்டுறவு வங்கிகளில் கறவை மாட்டுக்கு கடன் வழங்குமாறு பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
பின்னர் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவரான ரவிச்சந்திரன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப் பட்டுள்ளது.