விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு ஆகிய 2 திரைப்படங்களும் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரி பாதியாக பிரித்துக்கொள்ள இருக்கின்றன. இதற்கிடையில் இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு “விஜய் தமிழகத்தின் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக தான் அஜித் இருக்கிறார்.
இதனால் 2 படங்களுக்கும் சம அளவில் திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது. ஆகவே துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிகளவு திரையரங்குகள் வேண்டுமென பேசப் போகிறேன்” என அவர் கூறினார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அண்மையில் தில்ராஜு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “மீடியா முன்னாடி பேசவேண்டும் எனில் பதற்றம் ஆகுது.
நான் என்ன பேசினாலும் அதை சர்ச்சை ஏற்படுத்திவிடுகின்றனர். அந்த பேட்டியை முழுவதும் பார்த்து இருந்தால் நான் என்ன பேசினேன் என தெரியும். மீடியாவிடம் நான் வைக்கும் கோரிக்கை என்னவெனில் அந்த 20 செகன்ட் வீடியோவை மட்டும் வைத்து முடிவெடுக்காதீர்கள். ஒருவரை கேலி செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. திரையுலகில் இன்னும் நான் சாதிக்கவேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது” என்று அவர் பேசினார்.