இந்திய கிரிக்கெட் அணியின் 3 விதமான போட்டிக்குப் கேப்டனாக இருந்த விராட் கோலி சமீபத்தில் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது .அதோடு டி20 அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரின் ஏழு வருட கூட்டணியும் முடிவுக்கு வந்தது. இதனிடையே ஒருநாள் கேப்டன் பதவிலிருந்தும் விராட் கோலி விலகுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,” டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையில் கடந்த 5 வருடங்களாக உலகின் நம்பர் 1 அணியாக இந்திய அணி திகழ்கிறது .
இதனால் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியை விட்டுக் கொடுக்க விரும்பினால் தவிர அல்லது அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என விரும்பினால் எதிர்காலத்தில் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலக நேரலாம் .ஆனால் இது உடனடியாக நடக்கும் என நினைக்க வேண்டாம் .அதேபோல் ஒருநாள் தொடரிலும் இதே நிலை ஏற்படலாம் “என்றார். மேலும் பேசிய அவர்,” கிரிக்கெட்டில் பேட்டிங்கில் கவனம் செலுத்த கேப்டன் பதவியை விட்டுக் கொடுத்த முதல் நபராக விராட் கோலி இருக்கமாட்டார். கடந்த காலங்களில் வெற்றிகரமாக கேப்டன்சி செய்த பல வீரர்கள் பின்னர் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியில் இருந்து விலகினர்” என்று ரவிசாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.