ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயல்படுவதாக குமாரசாமி காரசாரமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் அளித்தனர். ஆனால் சபாநாயகர் ரமேஷ் குமார் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆளுகின்ற அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது.
இதையடுத்து பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும் படி உத்தரவிடக்கோரி 15 எம் எல் ஏ க்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்றும், இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது பற்றி எம்.எல்.ஏ க்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இதையடுத்து இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள போவதில்லை என்று அதிருப்தி எல்.ஏ.க்கள் அறிவித்தனர்.
இந்த பரபரப்புக்கு இடையே இன்று கர்நாடக சட்ட பேரவை தொடங்கியது. குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முதல்வர் குமாரசாமி, “கூட்டணி அரசை நடத்துவேனா, இல்லையா என்று கேள்விக்கு பதில் அளிக்க நான் வரவில்லை. எம்.எல்.ஏ க்களின் ராஜினாமாவை உடனே ஏற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. காங்கிரஸ் – மஜத அரசு மீது தவறான கருத்தை பரப்பி வருகின்றனர். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ க்கள் சுயமரியாதை இல்லாதவர்கள். ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். இன்றைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என அழுத்தம் தரக்கூடாது என்று சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தார்.