Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சில குறிப்புகள்..!!

ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலையில் கர்ப்பிணி பெண்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.

நாடு முழுவதும் கொரோனோவால் ஊரடங்கு வருகிற 14ம் தேதி வரை அமலில் உள்ளது. இக்காரணத்தினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரிதும் கர்ப்பிணிகள் முறையான சிகிக்சை பெற முடியாமலும், மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கக்கூடும் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது. அவ்வாறு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், கர்ப்பிணி பெண்கள் என்ன செய்யலாம் என்பதை பற்றி விளக்கமாக எடுத்துரைக்கிறார், சென்னையைச் சேர்ந்த டீனா அபிஷேக். இவர் குழந்தைப் பேறு, பாலூட்டுதல் பயிற்சியாளர். அதுமட்டுமின்றி மனநல ஆலோசகராகவும் பணிபுரிகிறார்.

இக்கட்டான இந்த காலகட்டத்தில் புதிதாய் கர்ப்பம் தரித்தவர்களின் கவனத்திற்கு:

புதிதாக திருமணம் ஆன தம்பதிகளின் கவனத்திற்கு, உங்கள் மனைவி கர்ப்பம் தரித்திருந்தால் மெடிக்கல் கடைகளில் கிடைக்கும் கர்ப்ப பரிசோதனை உபகரணங்களை வைத்து கண்டுபிடித்து கொள்ளலாம். ஆனால் மருத்துவமனைக்கு சென்று உறுதிப்படுத்தி கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

இந்த நேரத்தில் மனைவியை எவ்வாறு கவனித்து கொள்ளவேண்டும், எந்த மாதிரியான உணவுகளை கொடுப்பது, தவிர்ப்பது என்ற குழப்பம் மனதில் போட்டு உறுத்தும். இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் கவலைப்பட தேவையே இல்லை. மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

உடல் சோர்வு, வாந்தி, உடல் நடுக்கம், முதுகு வலி,  போன்ற நிலை ஏற்படக்கூடியது இயல்பு தான். அவர்களின் பிறப்பு உறுப்பில் எரிச்சல், ரத்தக் கசிவு, தொடர்ந்து வயிற்று வலி ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும்.

கருவில் இருக்கும் சிசுவை பரிசோதிக்கவும், குழந்தையின் வளர்ச்சியில் இருக்கக்கூடிய மாற்றத்தையும் தெரிந்து கொள்வதற்கு என்.டி.ஸ்கேன் பயன்படுத்த படுகிறது. இந்த ஸ்கேன் கருத்தரித்தலிருந்து சரியாக 12 வாரங்களுக்குள் செய்வது மிகவும் நல்லது. எனவே இந்த ஊரடங்கு நேரத்தில் கர்ப்பம் தரித்தால்,

கருவின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியின் மாற்றத்தை அறிவதற்கு 12 வாரங்கள் இருக்கின்றது. அதனால் பதற்றப்படாமல் நிம்மதியாக இருங்கள். மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால், மருத்துவர்களை ஆன்லைனில் தொடர்பு கொள்ளுங்கள். இல்லையேல், அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கும் ‘102′ நடமாடும் மருத்துவ வாகன சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

4 முதல் 6 மாத கர்ப்பிணிகளுக்கு சில முக்கியமான குறிப்புகள்:

கர்ப்பம் தரித்த பெண்கள் முதல் மூன்று மாதத்தில் ஒரு தடுப்பூசியும், அதன்பிறகு அடுத்து 2 மாதத்திற்குள் ஒரு தடுப்பூசியும் போடவேண்டும். ஆகவே இந்த தடுப்பூசியை இந்த மாதத்திற்குள் எந்த நாட்களுக்குள்ளாவது போட்டு கொள்ளுங்கள். நீங்கள் போடும் தடுப்பூசியை பொறுத்துதான், குழந்தையின் உடல் வளர்ச்சியையும் பரிசோதிக்க முடியும்.

அனாமலி ஸ்கேனையும் இந்த மாத காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் செய்து பாருங்கள். ஆகவே அவசர உதவிக்கு மட்டும் மருத்துவமனை செல்லுங்கள்.  எல்லா கால கர்ப்பிணி பெண்களும் எப்பொழுதும் புரத சத்து, இரும்பு சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை சேர்த்து கொள்ளவேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். குறைந்தது 15 நிமிடமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

இக்காலத்தில் பிரசவத்தை நெருங்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை:

இந்த மாதிரியான சூழலில் 35 வாரத்தை கடந்து இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்குத்தான் மருத்துவரின் ஆலோசனை அடிக்கடி தேவை. ஏன் என்றால் இந்த காலக்கட்டத்தில் தான் பிரசவத்திற்கான அறிகுறிகள் அதிகமாக தோன்றும்.

36வது வாரம் முதல் 37-வது வாரத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நாளில் இரண்டு முறை (நீண்ட இடைவெளியில்) வயிற்று வலி ஏற்படுவது போன்றது இயல்பாகும். இருந்தாலும் இடுப்பு வலி, மற்றும் வயிற்று வலி தொடர்ந்து ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கருவில் இருக்கும் குழந்தையின் நகர்வை,  ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறையாவது கவனிக்க வேண்டும். அதுமட்டுமின்றி 30 வாரம் ஆன கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நாட்களில் குழந்தையின் 3 நகர்வுகளும், 36 வாரத்தை கடந்து உள்ள பெண்களுக்கு ஒரு மணிநேரத்தில் 6 நகர்வுகளும் இருத்தல் வேண்டும்.

குழந்தையின் நகர்வு வழக்கத்திற்கு மாறாக குறையும்பொழுது அது சிக்கலாக முடியக்கூடும். சிலருக்கு பனிக்குடம் உடைந்துவிடும். அந்த நிலையில் நீங்கள் பதற்றப்படாமல், முடிந்தவரை சீக்கிரம் மருத்துவமனைக்கு செல்லுங்கள். பனிக்குடம் உடைந்ததில் இருந்து, அடுத்த 2 மணிநேரத்திற்குள் மருத்துவமனைக்கு  சென்று விடவேண்டும்.

யூ-டியூப் வழியாக மருத்துவம் பற்றிய தகவல் பெறுவது நல்லதா.?

உடல்நிலை ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு இருக்கும். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வாந்தி-மயக்கம் அதிகமாக காணப்படும். சிலபேருக்கு கொஞ்சம் குறைவாகவே இருக்கும். எனவேநேரடியாக சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

அவ்வாறு முடியாத பட்சத்தில் தொலைப்பேசி மூலமாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள் சிறப்பு.  மேலும் யூ-டியூப் சேனல்களில் உண்மையா என்று ஆராய்வதும் அறிந்து கொல்வதும் ரொம்ப முக்கியமானது.

 

 

 

Categories

Tech |