விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத நபர்களிடம் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றும் வகையில் வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதி முழுவதிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் அதிகம் கூட கூடிய முத்தாரம்மன் பஜார் பகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை போன்ற பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அத்தியாவசியமின்றி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சுற்றி திரிந்தவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என எச்சரித்துள்ளனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பதிவு முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல கூடிய வங்கி ஊழியர்கள், சுகாதாரதுறை பணியாளர்கள் ஆகியோர் தங்களது அடையாள அட்டை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.